திருமணத்தின்போது மணமகளுக்கு வழங்கப்படும் தங்கம் மற்றும் பணம், அந்தப் பெண்ணுக்கு சொந்தமானது என்று கேரள உயர்நீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
பெண்ணின் கணவர் அல்லது மாமியார் குடும்பத்தினர் என யாரும் அதற்கு உரிமை கோர முடியாது.
திருமணத்தின்போது மணமகளுக்கு பரிசாக வழங்கப்படும் தங்க நகைகள் மற்றும் பணம் போன்றவை பெண்ணின் சொத்து, அவை அந்த பெண்ணுக்கே சொந்தமானது என்று கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பானது, அத்தகைய உடைமைகள் அந்தப் பெண்ணுக்கு மட்டுமே சொந்தம் என்பதை சட்டப்பூர்வமாக மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, கணவர் அல்லது மாமியார் குடும்பத்தினரால் இதுபோன்ற மதிப்புமிக்க உடைமைகள், தவறாகப் பயன்படுத்தப்படும் வழக்குகள் ஏராளமாக உள்ளன என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
பெரும்பாலும் இதுபோன்ற வழக்குகளில், சொத்து பரிமாற்றங்களின் தனிப்பட்ட மற்றும் முறைசாரா தன்மை காரணமாக, பெண்கள் உரிமை அல்லது முறைகேடுகளை நிரூபிக்கும் ஆதாரங்களை வழங்குவது சாத்தியமற்றதாகிவிடும். இதுபோன்ற சூழ்நிலையில், நீதிமன்றங்கள் நீதி வழங்க நிகழ்தகவுகளை அதிகமாக நம்பியிருக்க வேண்டும். அதே நேரத்தில், திருமணப் பரிசுகளின் தனிப்பட்ட மற்றும் ஆவணமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, கடுமையான சட்ட ஆதாரங்களை வலியுறுத்துவது இதுபோன்ற விஷயங்களில் நடைமுறைக்கு மாறானது என்றும் இந்த பெஞ்ச் குறிப்பிட்டது.
2010ம் ஆண்டு திருமணத்தின்போது, தனது குடும்பத்தினரால் 63 சவரன் தங்கம் மற்றும் இரண்டு சவரன் சங்கிலி வழங்கப்பட்டதாகவும், உறவினர்களால் கூடுதலாக ஆறு சவரன் தங்கம் வழங்கப்பட்டதாகவும் மனுதாரர் வாதிட்டார். இருப்பினும், பெரும்பாலானோர் வழக்கமாகப் பயன்படுத்தும் பொதுவான சூத்திரமான, ஒரு வளையல் மற்றும் இரண்டு மோதிரங்கள் தவிர, மற்ற அனைத்து நகைகளும், பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான சாக்கில் தனது மாமியார் அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். பின்னர், அவரது கணவர் கோரிய ரூ.5 லட்சம் வழங்கப்படாததால் இவர்களின் உறவு மோசமடைந்தது.
ஆனால், அந்தப் பெண், தனது பெற்றோர் ஒரு நிலையான வைப்புத்தொகையில் டெபாசிட் செய்த பணத்தில் இருந்து தங்கம் வாங்கியதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்து தனது கூற்றை உறுதிப்படுத்தினார். வழக்கை பரிசீலித்த நீதிமன்றம், 59.5 சவரன் தங்கத்தை அல்லது அதற்கான தற்போதைய சந்தை மதிப்பை, மனுதாரருக்கு அவரது கணவர் திருப்பித் தர உத்தரவிட்டது.
இருப்பினும், அவரது உறவினர்களால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும், ஆறு சவரன் தங்கம் தொடர்பான ஆதாரத்தை அவரால் வழங்க முடியவில்லை என்பதையும் நீதிமன்றம் குறிப்பிட்டது. எனவே, அவரது அந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. இதேபோல், சில வீட்டுப் பொருட்களைத் திருப்பித் தர வேண்டும் என்ற அவரது மனு, அவற்றின் முறைகேடு தொடர்பாகவும், போதுமான ஆதாரங்கள் இல்லாததாலும் நிராகரிக்கப்பட்டது.
இதுபோன்ற வழக்குகளின் தாக்கங்களை எடுத்துரைத்த நீதிமன்றம், திருமணத்தின்போது மணமகளுக்கு வழங்கப்படும் தங்கம் பெரும்பாலும் கணவர் அல்லது அவரது குடும்பத்தினரால் அல்லது குடும்ப பழக்கவழக்கங்களின் ஒரு பகுதியாக பாதுகாக்கப்படுவதை கவனித்ததாக கூறியது.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்தப் பரிமாற்றங்களுக்கான எழுத்துப்பூர்வ பதிவு அல்லது ரசீது பெண்ணுக்குக் கிடைப்பதில்லை, மேலும் பெண்களால் அந்த நகைகளை அணுக முடியாமலும் போகலாம். சர்ச்சைகள் எழும்போது இது மிகவும் சிக்கலாகிறது, குடும்ப வன்முறை, வரதட்சணை துன்புறுத்தல் அல்லது விவாகரத்து போன்ற வழக்குகளில், பெண் தனது நகைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவோ அல்லது ஒருபோதும் திருப்பித் தரப்படவில்லை என்றும் கோரப்படுகிறது.
இருப்பினும், தனக்கு வழங்கப்பட்ட பொருட்களின் பட்டியல் அல்லது ஒப்புதலை அவர்கள் அரிதாகவே பெறுவதால், அதற்கான உரிமையை நிரூபிப்பது கடினமாகிவிடும். நீதிமன்றங்கள் இந்த நடைமுறைச் சிரமத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் குற்றவியல் வழக்குகளைப் போல கடுமையான சட்ட ஆதாரத்தை வலியுறுத்த முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது.
எர்ணாகுளத்தின் கலமசேரியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் தேவன் ராமச்சந்திரன் மற்றும் எம்பி சினேகலதா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. விவாகரத்து நடவடிக்கைகளுக்குப் பிறகு, பரிசுகள் மற்றும் நகைகளைத் திருப்பித் தருமாறு அந்த பெண் கேட்ட நிலையில், அவரது கணவன் வீட்டார் தர மறுத்ததால் அவர் நீதிமன்ற உதவியை நாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.