பாகிஸ்தானில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்தார். அவர் ”பயங்கரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான் ” என கடுமையாக சாடினார்.
பகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதலை நடத்தி உள்ளது.
இது தொடர்பாக நேற்று (7ம் தேதி) காலை 10.30 மணிக்கு மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி, விங் காண்டர் வியோமிகா சிங் ஆகியோர் உடன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பகல்காமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கொடூரமானது. காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சியை தடுப்பதே பயங்கரவாதிகளின் நோக்கம். காஷ்மீர் மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க திட்டமிட்டு பகல்காம் தாக்குதல் நடத்தப்பட்டது. பயங்கரவாதத்தின் அடையாளமாக பாகிஸ்தான் மாறி வருகிறது. பயங்கரவாத தாக்குதலை நிறுத்த வேண்டியது அவசியம்.
பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பயங்கரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான். பயங்கரவாத முகாம்களை அழிக்க நள்ளிரவு 1.05 மணி முதல் 1.30 மணி வரை தாக்குதல் நடத்தப்பட்டது. மொத்தமாக 25 நிமிடங்கள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மத மோதலை தூண்டும் வகையில் இந்தியாவில் தாக்குதல் நடத்தப்பட்டது; பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்தாத பாக்., அரசு அவர்களை ஆதரிப்பது அனைவருக்கும் தெரியும்.
21 முகாம்கள் அழிப்பு
பகல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காக ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடங்கப்பட்டது. பகல்காம் தாக்குதலில் கணவர்களை இழந்த பெண்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மொத்தம் 9 இடங்களில் 21 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
அடுத்தடுத்து தாக்குதல்
கடந்த மார்ச் மாதம் 4 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்; அதற்கு பயங்கரவாதிகள் பயிற்சி எடுத்த சர்ஜால் சாய்ல்கோட் முகாம் அழிக்கப்பட்டது. பதான்கோட் தாக்குதலுக்குத் திட்டம் வகுக்கப்பட்ட மெஹ்மூனா ஜோயா முகாம் அழிக்கப்பட்டது. மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கான பயிற்சி கொடுத்த மார்கஸ் டைபா முகாமும் தகர்க்கப்பட்டது. அஜ்மல் கசாப் பயிற்சி எடுத்ததும் இங்கு தான். முசாபராபாத்தில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் பயிற்சி மையம் குறிவைத்து அழிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
பெண் அதிகாரிகள் பேட்டி
இது குறித்து பெண் அதிகாரிகள் கர்னல் சோபியா குரேஷி, விங் காண்டர் வியோமிகா சிங் கூறியதாவது: 21 பயங்கரவாத முகாம்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்திய ராணுவ தாக்குதலில் பாகிஸ்தான் பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை. பாகிஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பயங்கரவாதிகளுக்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மும்பை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பயிற்சி பெற்ற பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன என்றனர்.
வீடியோ வெளியீடு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் இந்திய ராணுவத்தினர் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடத்த தாக்குதல் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது