இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையத்தில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அமமுக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைகளை பாதுகாக்க உருவாக்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கொள்கையைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. பேரூர் சிற்றூர் என கடைக்கோடி கிராமங்களில் கூட கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே நான் தனி ஆள் அல்ல. எனக்குப் பின்னால் இலட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர்.
எதிரணியை வீழ்த்துவதற்கு ஒருமித்த கொள்கை கொண்ட அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் அமமுக வேட்பாளராக களம் காண உள்ள மாவட்டச் செயலாளர் பார்த்திபனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அதேபோல் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தொகுதியில் தான் போட்டியிட தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்யும்படி டிடிவி தினகரன் கூறியுள்ளார் என அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், ‘கடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க., சார்பில் கடுமையாக பண விநியோகம் நடந்தது. அப்படி இருந்தும்… தி.மு.க., 80 ஆயிரம் ஓட்டுகள் தான் வாங்கியது.
டிடிவி தினகரன், ஓட்டுக்கு பணம் தராமலேயே 58 ஆயிரம் ஒட்டுகள் வாங்கினார். இந்த முறை ஆளும் கட்சி உட்பட எந்த கட்சியாக இருந்தாலும், அவர்கள் வழியிலேயே நிச்சயம் தேர்தலை சந்திப்போம். இதனால் இங்கும் வெற்றி நிச்சயம் என கூறினர். இப்போது உள்ள சூழலில் டிடிவி தினகரன் இப்படி அதிரடி காட்ட என்ன காரணம் என பல தகவல்கள் வெளியாகி உள்ளன.
தன்னிச்சையாக அறிவிப்பு
பாஜக- அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக உள்ளது என்று சொல்லிவந்தார் டிடிவி.தினகரன். அப்படியிருக்கும் போது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை என எதுவும் இல்லாமலேயே தன்னிச்சையாக சோளிங்கர் தொகுதியில் வேட்பாளரை டிடிவி.தினகரன் அறிவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிடிவி தன்னிச்சையாக வேட்பாளர் அறிவிப்பை வெளியிடக் காரணம் என்ன?
அ.தி.மு.க.,- பா.ஜ.க., அணியில் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. தொடக்க நிலையிலேயே தினகரன் கட்சிக்கு பெரிய செல்வாக்கு எதுவும் இல்லை. அதனால் அவருக்கு மட்டும் ஒரு தொகுதியை ஒதுக்கலாம் என்று எடப்பாடி தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.
இதனால் கோபமான டிடிவி.தினகரன், அதிரடியாக வேட்பாளரை அறிவித்துள்ளார். இங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் வேட்பாளர் பார்த்திபன், 2016 ஆம் ஆண்டு இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
இதனால் இந்த அறிவிப்பு மிகவும் கவனிக்கத்தக்கதாக மாறியிருக்கிறது. இதன் உடனடி விளைவாக டிடிவி.தினகரனிடம் சமரசப் பேச்சுகள் தொடங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சிக்கலை நீடிக்க விடக்கூடாது என பா.ஜ.க., தீவிரமான பேச்சு வார்த்தைகளில் களம் இறங்கி உள்ளது.
-மா.பாண்டியராஜ்