கண்ணகி கோயில் திருவிழாவின் போது, இதுவரை இல்லாத நிகழ்வாக கேரள போலீஸ் கோயில் கருவறை அருகே வந்து பாதுகாப்பு கொடுத்துள்ளனர். இது தமிழர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுயிக் பாலசிங்கம் கூறியதாவது:
வழக்கமாக கற்புக்கரசி கண்ணகி கோயிலில் கேரள போலீசார் சன்னிதானம் அருகே எப்போதும் வந்ததே இல்லை. இந்த ஆண்டு இதுவரை இல்லாத புதிய நடைமுறையாக கண்ணகி அம்மன் வீற்றிருக்கும் சன்னிதானத்தின் முன்பே அதாவது கருவறை முன்பே கேரளா டிஎஸ்பி ஒருவர் நின்று கொண்டு சட்டாம்பிள்ளைத்தனம் பண்ணிக் கொண்டிருந்தார்.
இது கண்ணகியை தரிசிக்க வந்தவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது. தேனி மாவட்ட நிர்வாகம் கண்டும் காணாதது போல் இருந்ததாலோ என்னவோ, வழக்கத்துக்கு மாறாக கேரள போலீசார் கிழக்கு வாசலிலும் மேற்கு வாசலிலும் குவிக்கப்பட்டு இருந்ததை கண்ணால் காண முடிந்தது.
கேரள எல்லையில் இருந்து 33 மீட்டர் தமிழக எல்லைக்குள் இருக்கும் கண்ணகி கோட்டத்திற்குள், கேரள போலீசார் வருவதற்கு எந்தச் சட்டமும் இல்லை என்கிற நிலையில், சன்னிதானத்தின் அருகே கேரள எப்படி வந்தார்கள் என்பதை தெரியப்படுத்த வேண்டும்.
கண்ணகி கோயிலை சொந்தம் கொண்டாட நினைக்கும் கேரளா
ஏற்கனவே கண்ணகி கோயில் எங்களுக்கு சொந்தமானது என்று பத்தாண்டுகளுக்கு முன்பே கேரளா சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், இன்று அதற்கான அச்சாரம் போட்டதை கண்ணால் காண முடிந்தது.
இதை எப்படி தேனி மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கலாம் என்று கேள்வி எழுப்புகிறேன்…?
கூடுதலாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு வண்டிகள் 50 க்கும் மேற்பட்டவை கண்ணகி கோயில் வளாகத்திற்குள் வர வேண்டிய தேவை எங்கே வந்தது…?
போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத கேரள காவல்துறை, சன்னிதானத்தின் அருகே குவிக்கப்பட்டிருந்தது எதிர்காலத்தில் அங்கு என்ன நடக்குமோ என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. தமிழக அரசு எதற்காக இந்த இரட்டை நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்கிற கேள்வியும் எழுகிறது.
பத்மநாபபுரம் அரண்மனைக்குள் தமிழக போலீசார் ஆதிக்கம் செலுத்த முடியுமா?
குமரி மாவட்டத்தில் கேரள மாநில அரசுக்கு சொந்தமாக இருக்கும் பத்மநாபபுரம் அரண்மனைக்குள் தமிழக போலீசார் ஆதிக்கம் செலுத்த முடியுமா என்கிற கேள்வியையும் தமிழக அரசுக்கு முன் வைக்கிறேன்.
கூடுதலாக செங்கோட்டை அருகே 140 ஏக்கரை கைவசம் வைத்திருக்கும் கேரள மாநில அரசின் நிலத்திற்குள் தமிழக காவல்துறையோ,வருவாய் துறையோ ஆதிக்கம் செலுத்த முடியுமா…?
முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும். அதற்கான செலவு தொகையை நாங்களே ஏற்றுக் கொள்கிறோம் என்று உச்சநீதிமன்றத்தில் கேரளா பிரமாண பத்திரம் தாக்கல் செய்து 20 நாட்கள் கூட ஆகாத நிலையில், கண்ணகி கோயிலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர கேரள மாநில போலீசார் எடுத்திருக்கும் இந்த புதிய உத்தி ஆபத்தானது. கூடுதலாக பெரியார் புலிகள் காப்பக வண்டிகள் 100 க்கும் மேற்பட்டவை போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருந்தது என்பதையும் மறக்க முடியாது.
பக்தர்களுக்கு அடிப்படை வசதி இல்லை
கடந்த ஆண்டை போல மூன்று மடங்கு கூட்டம் அதிகமாக கண்ணகி கோயிலுக்கு வந்த நிலையில், குடிதண்ணீர் தவிர பெண்களுக்கான எவ்வித அடிப்படை வசதியும் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டு இருந்தது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. கூடுதலாக கொக்கரகண்டத்தில் கேரள போலீசார் நடத்தும் அபசகுன நாடகமான மெட்டல் டிடெக்டர் சோதனை, சர்வாதிகாரத்தின் உச்சம்.
தமிழர்களை மரியாதை இல்லாமல் பேசிய கேரள போலீசார்
தமிழ்நாட்டு பக்தர்களை இறங்குடா என்றும், கேரிக்கோடா என்றும், மரியாதை இல்லாமல் ஒருமையில் கேரள போலீசார் அழைத்ததை நேரில் கண்ணால் கண்டேன். ஒரு கேரள எஸ்.ஐ., என்னிடமே இது எங்க ஊரு என்று சண்டையிட்ட காட்சியும் நடந்தது.
குமுளி முதல் வண்ணாத்தி பாறை வரை கிட்டத்தட்ட 14 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்து சென்ற பெண் பக்தர்களுக்கு இயற்கை உபாதைகளை கழிக்க எவ்வித நடவடிக்கையும் கேரள மாநில அரசு எடுக்கவில்லை. அவ்வளவு இரக்கமில்லாமல் கேரளா நடந்து கொண்டது.
கட்டுக்கடங்காமல் வந்த கூட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய கேரளா போலீசாரும் மற்றும் கேரள வனத்துறை வண்டிகளை ஆங்காங்கே நிறுத்தி வைத்து வேடிக்கை பார்த்ததையும் கண்கூடாக காண முடிந்தது.
அறநிலையத்துறை உணவு கெட்டுப்போனது
எல்லாவற்றிற்கும் மேலாக தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்த உணவு அவ்வளவு சீக்கிரம் கெட்டுப் போகும் என்று கனவிலும் கூட நாங்கள் நினைக்கவில்லை. கம்பம் பள்ளத்தாக்கில் கண்ணகி பக்தர்களுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாட்டின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் உணவு அருந்த முடியாத நிலை ஏற்பட்டது என்பதையும் வருத்தத்தோடு பதிவு செய்கிறேன்.
மாவட்ட நிர்வாகம் உணவு தொடர்பான ஏற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் வேண்டுகோளாக முன்வைக்கிறேன். இந்து சமய அறநிலையத்துறையின் உழைப்பை நான் குறை கூறவில்லை. ஆனால் வெகு சீக்கிரமே சமைக்கப்பட்டு விட்டதால் காலை 10 மணிக்கெல்லாம் உணவு கெட்டுப்போகும் அவல நிலை ஏற்பட்டுவிட்டது.
அவ்வளவு கூட்டம் ஆயிரக்கணக்கான வண்டிகளில் ஆபத்தான அந்த மலைச்சரிவுகளில் பயணித்தும், கற்புக்கரசி கண்ணகியின் அபார சக்தியால், ஒரு சின்ன விபத்து கூட நேரவில்லை என்கிற சந்தோசம் மேற்கண்ட கவலைகளை எல்லாம் என்னை மறக்க செய்கிறது.
கண்ணகி கோயில் தமிழகத்துக்குச் சொந்தமானது
அடுத்த இரண்டாவது பளியங்குடி, தெல்லுகுடி வழியாக தமிழக அரசு பாதை அமைத்து விடும் என்கிற நம்பிக்கையோடு இந்த ஆண்டை கடந்து செல்ல விரும்புகிறேன். கற்புக்கரசி கண்ணகி கோயில் தமிழகத்திற்கு சொந்தமானது.
கண்ணகி வரலாறு அறியாதவர் அல்ல நமது முதல்வர்
கற்புக்கரசி கண்ணகி ஒரு பச்சை தமிழச்சி. கண்ணகியின் வரலாற்றை தி.மு.க.,வை விட தெளிவாக உணர்ந்தவர்கள் வேறு யாரும் இல்லை. அந்த அளவு கண்ணகி வரலாறு தி.மு.க.,விற்கு அத்துப்படி. இப்படி எல்லா விஷயமும் தெரிந்து கொண்டு தமிழக முதல்வர் மௌனம் காப்பது முறையல்ல.
கேரள அரசை பகைத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் கண்ணகி பச்சை தமிழர் என்பதை மிக தௌ்ளத்தெளிவாக கேரளாவிற்கு விளக்க தமிழக முதல்வரால் முடியும். வரலாறும் முழுவதும் எல்லோருக்கும் தெரியும். நம் உரிமைகளை ராஜதந்திர முறையில் முதல்வர் மீட்டுத்தருவார் என நம்புகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.
-மா.பாண்டியராஜ்