சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள பணிபுரியும் மகளிருக்கான “தோழி” விடுதிகள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அரசினர் குழந்தைகள் இல்லத்தின் புதிய கட்டடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களில் ரூ.10.38 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பணிபுரியும் மகளிருக்கான இரண்டு “தோழி” விடுதிக் கட்டடங்களையும், தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அரசினர் குழந்தைகள் இல்லத்தில் ரூ.7 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் மூலம் தற்போது வரை சென்னை, திருவள்ளூர், கோயம்புத்தூர், செங்கல்பட்டு, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், வேலூர், சேலம், விழுப்புரம், திருநெல்வேலி, பெரம்பலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, மதுரை, தருமபுரி, கடலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் 23 “தோழி” விடுதிகள் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இவ்விடுதிகள் மூலம் சுமார் 2,100 பணிபுரியும் மகளிர் பயன்பெற்று வருகின்றனர்.
மேலும், மற்ற மாவட்டங்களிலும் பணிபுரியும் மகளிருக்கான விடுதி தேவையை கருத்தில் கொண்டு, ரூ.220.87 கோடி மதிப்பீட்டில் 2,540 பெண்கள் தங்கும் வகையில் 22 புதிய “தோழி” விடுதிகள் கட்டுமானப் பணிகள் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் மூலம் தற்போது நடைபெற்று வருகின்றன.
இன்று திறந்து வைக்கப்பட்ட சிவகங்கை மற்றும் தேனி “தோழி” விடுதிகள் மொத்தம் 100 பெண்கள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ளன. பணிபுரியும் பெண்கள் மட்டுமல்லாது, பயிற்சி, உயர்கல்வி மற்றும் நேர்காணல் போன்ற காரணங்களுக்காக நகரங்களுக்கு வரும் பெண்களும் குறுகிய காலத்திற்கு தங்கும் வகையில் இவ்விடுதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த விடுதிகளில் பயோமெட்ரிக் நுழைவு, 24 மணி நேர பாதுகாப்பு, Wi-Fi வசதி, சிசிடிவி கண்காணிப்பு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆரோக்கியமான உணவு, பகல் நேர குழந்தைகள் பராமரிப்பு, சுடுநீர் வசதி, சலவை இயந்திரம், இஸ்திரி வசதி, வாகன நிறுத்துமிடம் மற்றும் பொழுதுபோக்கு அறை போன்ற பல்வேறு வசதிகள் குறைந்த வாடகையில் வழங்கப்படுகின்றன.
இதனுடன், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களின் கட்டட வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறையில் உள்ள சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
சுமார் 1,649 சதுர மீட்டர் பரப்பளவில் தரை மற்றும் முதல் தளம் கொண்ட இந்த கட்டடத்துடன், 592 சதுர மீட்டர் பரப்பளவில் பூப்பந்து உள்விளையாட்டு அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தைகள் இல்லத்தில் சுமார் 100 சிறுவர்கள் தங்கும் வசதியுடன் அறைகள், மருத்துவ சிகிச்சை அறை, சமையல் அறை, உணவுக்கூடம், ஆற்றுப்படுத்துனர் அறை மற்றும் பல்நோக்கு கூடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.



