தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் கிராமத்தில் நடைபெற்ற திருமண விருந்து நிகழ்ச்சியில் புகுந்து, 6 பேரை மர்ம கும்பல் கொடூரமாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்தினரை, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அஜாக்கிரதையால் நேர்ந்த அசம்பாவிதம்
செய்தியாளர்கள் சந்திப்பில் ஜான் பாண்டியன் பேசியதாவது:
“நெட்டூர் கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாகவே தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் ஏற்கனவே காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால், காவல்துறை எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
தற்போது வன்முறை நிகழ்ந்த அன்றும் கூட ஊர் மக்கள் காவல் நிலையத்திற்குச் சென்று முன்கூட்டியே புகார் அளித்துள்ளனர். ஆனால், அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சுபாஸ் சந்திரபோஸ் புகாரைப் பெற மறுத்துள்ளார். இந்தச் சம்பவத்திற்கு முழு முதற்காரணம் காவல்துறையின் அலட்சியமும், அஜாக்கிரதையும்தான். முன்பே உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த அசம்பாவிதத்தைத் தடுத்திருக்கலாம்.”
லஞ்சப் புகாரும் மக்கள் சந்தேகமும்
“எதிர் தரப்பினரிடம் பணம் வாங்கிக்கொண்டு காவல்துறை சமாதானம் பேசியதால்தான், வன்முறையாளர்கள் துணிச்சலுடன் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தற்போது இச்சம்பவம் தொடர்பாக 8 பேரை கைது செய்துள்ளதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், கைது செய்யப்பட்டவர்களின் பெயர், புகைப்படம் போன்ற எந்தவொரு விவரத்தையும் காவல்துறை வெளியிடவில்லை. கைதானவர்களின் விவரங்களை மறைப்பது ஏன்? அவர்கள் உண்மையான குற்றவாளிகள்தானா என்ற சந்தேகம் பாதிக்கப்பட்ட மக்களிடம் வலுவாக எழுந்துள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
சாதி வன்மம் – போராட்ட எச்சரிக்கை
நெட்டூரில் காலையிலிருந்தே தகராறு நிலவி வந்த சூழலில், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தும் ஏன் பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பிய ஜான் பாண்டியன், இத்தாக்குதல் சாதி வன்மத்தோடு மக்கள் மீது நடத்தப்பட்ட ஒரு கொலைவெறித் தாக்குதல் என்று சாடினார்.
மேலும், “அரசுக்குக் கெட்டப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு சில காவல் அதிகாரிகள் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. இப்போது பொதுமக்களை அழைத்துச் சென்று உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி மீண்டும் புகார் அளிக்க உள்ளேன். இந்த விவகாரத்தில் காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்” என எச்சரித்தார்.
இனிமேல் இது போன்ற சட்டம்-ஒழுங்கு பாதிப்புகள் ஏற்படாத வண்ணம், காவல்துறை அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடனும் நடுநிலையோடும் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



