தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை என்றாலும், அரசு வேலைவாய்ப்பு, நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகள் இடம்பெறாதது ஏமாற்றமளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் சேவை உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இந்தியாவில் ஏற்கனவே 21 மாநிலங்களில் இந்தச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக பாமக வலியுறுத்தி வந்த கோரிக்கையை அரசு தற்போது ஏற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு ஒரு பவுன் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் திட்டம், மூத்த குடிமக்களுக்கான பொழுதுபோக்கு மையங்கள், “அறிவகம்” என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு திறன் நகரம் அமைக்கும் திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை.
வேளாண் வளர்ச்சிக்குத் தேவையான நீர்ப்பாசனத் திட்டங்கள் தொடர்பாக காவிரி–குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்துதல், தென்பெண்ணையாறு–பாலாறு மற்றும் தென்பெண்ணையாறு–செய்யாறு இணைப்புத் திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தடுப்பணைகள் அமைப்பது உள்ளிட்ட அறிவிப்புகளை பாமக வரவேற்கிறது.
அதேநேரம், தருமபுரி–காவிரி உபரி நீர் திட்டம், அரியலூர்–சோழர் பாசனத் திட்டம் மற்றும் காவிரி–சரபங்கா–திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது. காவிரி–குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு ரூ.150 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டிருப்பது போதுமானதல்ல. நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு ஆண்டுதோறும் குறைந்தது ரூ.25,000 கோடி ஒதுக்க வேண்டும்.
தவெக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டிருந்த சுமார் 400 வாக்குறுதிகளில், 40 வாக்குறுதிகளைக் கூட செயல்படுத்தும் வகையிலான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை, மாநிலம் முழுவதும் பேருந்துகளில் இலவச பயணம், மாதந்தோறும் மின் கட்டண கணக்கெடுப்பு உள்ளிட்ட வாக்குறுதிகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
அரசுத் துறைகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களும் நிரப்பப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 6 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு முந்தைய ஆண்டுகளை விட குறைக்கப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது. ஆசிரியர் பற்றாக்குறை ஏற்கனவே நிலவி வரும் நிலையில், இந்த நிதிக்குறைப்பு அரசு பள்ளிகளின் தரத்தை மேலும் பாதிக்கும் அபாயம் உள்ளது.
மேலும், சமூகநீதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதற்கான நிதி இந்த நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படவில்லை. கோவை–அரியலூர் மின் வழித்தடத் திட்டத்தை தனியார் முதலீட்டில் செயல்படுத்தும் அறிவிப்பையும் ஏற்க முடியாது.
அரசின் மொத்தக் கடன் மற்றும் வருவாய்ப் பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில், மூலதனச் செலவுகளுக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது பலவீனமான நிதி மேலாண்மையை வெளிப்படுத்துகிறது.
“அரசு வேலைவாய்ப்புகள், நீர்ப்பாசனத் திட்டங்கள், வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது உள்ளிட்ட மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அறிவிப்புகளை பட்ஜெட் மீதான பதிலுரையிலாவது அரசு வெளியிட வேண்டும்,” என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.



