வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தொல்பொருட்களைக் காட்சிப்படுத்த தனி அருங்காட்சியகக் கூடம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு ஐந்து மாதங்களுக்கும் மேலாகியும் கட்டுமானப் பணிகள் தொடங்காததால், தொல்லியல் ஆர்வலர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அருகே நடைபெற்ற அகழாய்வுகளைத் தொடர்ந்து, வெம்பக்கோட்டை வைப்பாற்றின் வடக்குக் கரையோரத்தில் அமைந்துள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் ஏராளமான வரலாற்றுச் சுவடுகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, 2022 மார்ச் 16-ஆம் தேதி முதல் கட்ட அகழாய்வு தொடங்கப்பட்டது. பின்னர் 2023-ஆம் ஆண்டு இரண்டாம் கட்டமும், 2024 ஜூன் 18-ஆம் தேதி மூன்றாம் கட்டமும் நடைபெற்றன.
இந்த மூன்று கட்ட அகழாய்வுகளில் மொத்தம் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நுண்கற்காலக் கருவிகள், பாசிமணிகள், சுடுமண் காதணிகள், பொம்மைகள், சங்ககால வளையல்கள், மோதிரங்கள், சில்லுவட்டுகள், இரும்பு உருக்குக் கழிவுகள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட பல்வேறு அரிய தொல்பொருட்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இக்கண்டுபிடிப்புகள் பண்டைய தமிழர்களின் தொன்மையான நாகரிகம், தொழில்நுட்ப அறிவு மற்றும் கடல் கடந்த வாணிபத் தொடர்புகளை உறுதிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அகழாய்வில் கிடைத்த பொருட்கள் தற்போது தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அகழாய்வு நடைபெற்ற இடத்தில் தற்காலிக காட்சிக்கூடமும் அமைக்கப்பட்டு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வரலாற்று ஆர்வலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பார்வையிட்டனர். மேலும், விருதுநகர் புத்தகத் திருவிழாவிலும் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக வெம்பக்கோட்டை அகழாய்வு மாதிரிகள் மற்றும் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
கீழடியைப் போன்று வெம்பக்கோட்டை அகழாய்வுப் பொருட்களுக்கென நிரந்தர அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக எழுந்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தை திறந்து வைத்தபோது, அரசு அருங்காட்சியக வளாகத்திலேயே வெம்பக்கோட்டை அகழாய்வுப் பொருட்களுக்கான தனி காட்சிக்கூடம் அமைக்கப்படும் என்று அமைச்சர்கள் அறிவித்தனர்.
எனினும், அறிவிப்பு வெளியாகி ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை கட்டுமானப் பணிகள் தொடங்காதது தொல்லியல் ஆர்வலர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, வெம்பக்கோட்டை அருங்காட்சியகத் திட்டத்துக்கு விரைவில் நிதி ஒதுக்கி கட்டுமானப் பணிகளை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தின் தொன்மை, இரும்புக்கால வரலாறு மற்றும் தமிழர்களின் கடல் கடந்த வாணிப மரபை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பு உருவாகும் என்றும் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



