திருப்பத்தூர் மாவட்டம்,வாணியம்பாடி அருகேயுள்ள ஊசித்தோப்பு பகுதியை சேர்ந்தவர், ஓட்டுநர் விக்னேஷ் குமார். இவருடைய ஒன்றரை வயது மகன் பூமிஷுக்கு வாணியம்பாடி இந்திரா நகரில் உள்ள அரசு துணை சுகாதார நிலையத்தில் தாய் கீர்த்திகா குழந்தை பூமிஷை பகல் 11 மணி அளவில் தடுப்பூசி போட்டுள்ளார். இரண்டு தடுப்பூசிகள் போட்டுள்ளனர்.
பின்னர் குழந்தையை வீட்டிற்கு அழைத்து சென்ற பிறகு கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்து போன பெற்றோர் நடுஇரவு குழந்தையை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறினர்.
குழந்தைக்கு தடுப்பூசி போட்டு இறந்ததால் குழந்தையின் உடலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர் .
தடுப்பூசி போட்டு குழந்தை இறந்தது தொடர்பாக சுகாதார இணை இயக்குநர் ஞான மீனாட்சி விசாரணை மேற்கொண்டு வருகிறார். பெற்றோர் தங்களின் குழந்தை உடலை பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர் .
இருப்பினும் குழந்தை இறப்புக்கான காரணம் தெரியவேண்டும் என்பதால் பேச்சுவார்த்தைக்கு பின்னர் பிரேதபரிசோதனை செய்யப்பட்டது.



