குடியாத்தத்தில் பட்டப் பகலில் மிளகாய்ப் பொடி தூவி நான்கு வயது சிறுவன் கடத்தப்பட்டான். ஆறு தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் கடத்தப்பட்ட சிறுவன் இரண்டு மணி நேரத்துக்குள் மீட்கப்பட்டான்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வேணு. அவரது மனைவி ஜனனி. அவர்களது நான்கு வயது குழந்தை யோகேஷ் குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ப்ரீ.கே.ஜி படித்து வருகிறான்.
இதனிடையே நேற்று மதியம் சுமார் 12.30 மணி அளவில் அவரது தந்தை வேணு தனது இருசக்கர வாகனத்தில் பள்ளியிலிருந்து யோகேஷ் அழைத்து வந்து வீட்டுக்குள் சென்றபோது. கர்நாடகா பதிவு எண் கொண்ட காரில் வந்த மர்ம நபர்கள் வேணு மீது மிளகாய்ப் பொடி தூவி விட்டு காரில் கடத்திச் சென்றனர். இதனையடுத்து பதறி அடித்து ஓடி வந்த அவரது தந்தையை கீழே தள்ளிவிட்டு சிறுவனை காரில் கடத்திச் சென்றனர். உடனடியாக இது குறித்து குடியாத்தம் நகர காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர காவல் துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி விகளை ஆராய்ந்த போது காரின் பதிவு எண் போலி என கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அவர்கள் கடந்த இரண்டு நாட்களாக இதே பகுதியில் நோட்டமிட்டு குழந்தையை கடத்தியது காவல்துறையினர் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
மேலும் 6 தனிப்படைகளை அமைத்து குழந்தையை தேடும் பணியில் வேலூர் மாவட்ட காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்ட நிலையில்காரில் கடத்திச் சென்ற சிறுவனை சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மாதனூர் அருகே தேவிகாபுரம் என்ற பகுதியில் சாலை ஓரமாக சிறுவனை விட்டு சென்றிருந்தனர.
அந்தப் பகுதி மக்கள் சிறுவன் கடத்தப்பட்ட செய்தி அறிந்து உடனடியாக இதுகுறித்து சிறுவன் குறித்த தகவலை அவர்களது உறவினருக்கும் குடியாத்தம் நகர காவல் துறையினருக்கும் தெரிவித்து அவரது புகைப்படத்தை அனுப்பினர் அதில் கடத்தப்பட்ட சிறுவன் தான் என்பது உறுதியானது. சம்பவ இடத்திற்கு சென்ற குடியாத்தம் காவல் துறையினர். கடத்தப்பட்ட சிறுவனை மீட்டு அவனது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் சம்பவ இடத்தில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் மற்றும் குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தெரிவிக்கையில் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. இருப்பினும் குழந்தையை காரில் கடத்திய குற்றவாளிகளை தேடி வருகிறோம். விரைவில் அவர்கள் பிடிக்கபடுவார்கள் என்று கூறினார்.



