தமிழக சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம், அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் விஜய், தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தமிழகத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக் கூடாது என்பதே அரசின் நிலைப்பாடு என்று தெரிவித்தார். இதையடுத்து சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தொகுதி மறுவரையறையால் எந்த சூழலிலும் தமிழகம் பாதிக்கப்படக் கூடாது என்பதே திமுகவின் உறுதியான நிலைப்பாடு என்றும், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை திமுக முழுமையாக ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பேசுகையில், நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படாத நிலையில், அரசியல் காரணங்களுக்காகவே அவசரமாக இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, அதிமுக இந்த தீர்மானத்தை நிராகரிப்பதாக தெரிவித்தார்.
தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த், ஒன்றிய அரசு இன்னும் சட்ட முன்வடிவை கொண்டு வராத நிலையில் எந்த அடிப்படையில் இந்த தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார்.
பாமக சார்பில் கணேஷ்குமார், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளதாகவும், முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் கூறி எதிர்ப்பு தெரிவித்தார்.
பாஜக சார்பில் போஜராஜன் பேசுகையில், தேவையான மாற்றங்களை காலத்திற்கேற்ப ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அரசின் தனித் தீர்மானத்தை எதிர்த்து தொகுதி மறுவரையறையை கட்சிகள் ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்னி அரசு பேசுகையில், தொகுதி மறுவரையறையால் தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறையும் அபாயம் இருப்பதாகவும், இந்த சூழலில் முதல்வர் கொண்டு வந்துள்ள தீர்மானம் அவசியமானது என்றும் கூறி ஆதரவு தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செல்லசாமி பேசுகையில், தற்போதைய தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படக்கூடாது என்றும், அனைத்து மாநிலங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி மட்டுமே முடிவு எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அமைச்சர் ஷாஜகான் பேசுகையில், மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை கட்சி முழுமையாக ஆதரிப்பதாக தெரிவித்தார்.
விவாதத்திற்கு பின்னர் நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில், அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில், திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் முதல்வரின் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேமுதிக, வாக்கெடுப்பின்போது தனது நிலைப்பாட்டை தெளிவாக பதிவு செய்யவில்லை.



