சித்ரா பவுர்ணமிக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது, என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.
திருவணணாமலை மாவட்ட ஆட்சியர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலை ஒட்டிய 14 கிலோமீட்டர் மலையை சுற்றி கிரிவலப் பாதையில் பௌர்ணமி தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் சாதாரண நாட்களில் நூற்றுக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் வருகின்றனர். திருக்கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் கூட்டம் வர கூடிய பௌர்ணமியாக சித்ரா பௌர்ணமி உள்ளது.
இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி மே மாதம் 11-ம் தேதி தொடங்குகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு 8.48-க்கு தொடங்கி மறுநாள் திங்கட்கிழமை இரவு 10.44 மணிக்கு முடிவடைகிறது.
இந்த சித்ரா பௌர்ணமிக்கு சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என மாவட்ட நிர்வாகம் கணித்துள்ளது.
சித்ரா பௌர்ணமி முன்னேற்பாடுகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் உள்ளிட்டோர் அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்புறம் மற்றும் கோவிலின் ஏழாம் பிரகாரமான நான்கு மாட வீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிமெண்ட் சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சித்ரா பௌர்ணமிக்கு முன்னதாக சிமெண்ட் சாலை பணிகளை ரெட் பிக்ஸ் மூலம் 80 சதவீத பணிகளை பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் முடிக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
ராஜகோபுரம் அருகிலும் மாட வீதி மற்றும் கிரிவலப் பாதையில் சாலையை ஆக்கிரமித்து பக்தர்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள கடைகளின் பொருட்களை பறிமுதல் செய்து ஏலம்கள் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சித்ரா பௌர்ணமிக்கு வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக சுமார் 20 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. கிரிவலம் வரும் பக்தர்களுக்கு வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. மேலும் இதய சிகிச்சை மருத்துவர் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட உள்ளது.
வருகின்ற காலம் கோடை காலம் என்பதால் வரும் பக்தர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு அனைத்து சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. சித்ரா பௌர்ணமியில் அன்னதானம் செய்யப்படும் இடங்களை உணவுத்துறை அதிகாரிகளைக் கொண்டு தரமாக உணவு வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் சோதனை செய்யப்படும்.
பக்தர்கள் நீண்ட வரிசையில் வெயிலில் காத்திருக்காமல் இந்த முறை விரைவாக சாமி தரிசனம் செய்ய சிறப்பு முயற்சி எடுக்கப்படுகிறது. அதன் மூலம் நீண்ட நேரம் பக்தர்கள் காத்திருக்கும் நிலையை தவிர்க்க முடியும்.
அருணாச்சலேஸ்வரர் கோயில் சித்ரா பௌர்ணமி தினத்தன்று கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் பொது தரிசனம் வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.