அ.தி.மு.க.,வினர் நடத்திய ரத்ததான நாடகத்தை கண்ட தமிழக மக்கள் ‘‘எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே… சொந்த நாட்டிலே… ’’ என்று எம்.ஜி.ஆரி்ன் பாடல்களை பாடி சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.
அ.தி.மு.க., பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, இந்தியா- பாக்., இடையே ராணுவ மோதல்கள் நடந்து வருவதால், தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம். நாம் நாட்டு ராணுவத்துடன் துணை நிற்போம் என அறிவித்திருந்தார். எதிர்பாராத விதமாக எல்லை மோதல்கள் திடீரென முடிவுக்கு வந்து விட்டது. பாகிஸ்தான் இந்தியாவிடம் சரணடைந்து விட்டது.
இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் முடிவுக்கு வந்ததால், மீண்டும் அ.தி.மு.க.,வினர் தங்கள் கட்சி தலைவரின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 85க்கும் மேற்பட்ட இடங்களில் ரத்ததான முகாம்கள் நடந்தன. பல இடங்களில் உண்மையாகவே அ.தி.மு.க., தொண்டர்கள் ரத்ததானம் செய்தனர்.
ஓரிரு இடங்களில் போஸ் கொடுத்து சென்று விட்டனர் என்ற புகார் கிளம்பி உள்ளது.
இதற்கான ஆதாரத்தையும் தி.மு.க.,வினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் சட்டமன்ற அ.தி.மு.கவில் , எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் ஜெயசுதா.
இப்போது திருவண்ணாமலை மத்திய மாவட்ட அ.தி.மு.க., செயலாளராக இருந்து வருகிறார். இவரது தலைமையில் அ.தி.மு.க., தொழி்ல்நுட்ப அணியினர் சார்பில் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழாவை ஒட்டி ரத்ததான முகாம் நடத்தினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.,வும், இப்போதைய மத்திய மாவட்ட செயலாளருமான ஜெயசுதாவும் ரத்ததானம் வழங்கினார். அதாவது ரத்ததானம் வழங்கியதை போல் ஒரு மினி நாடகத்தை சூட்டிங் செய்தார்.
இந்த சூட்டிங்கில் முன்னாள் அறநிலையத்துறை அமைச்சரும், தற்போதைய ஆரணி எம்.எல்.ஏ.,வுமான சேவூர் ராமச்சந்திரனும் பங்கேற்றார். தவிர இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பரத்ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ராகவன், ஸ்ரீதர், வீரபத்திரன், மாணவரணி செயலாளர் சத்யராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் இயேசுபதம், மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
வேலுார் சி.எம்.சி., மருத்துவமனை மருத்துவக்குழுவினர் 15 பேர் ரத்தம் சேகரித்தனர். மொத்தம் 71 பேர் ரத்ததானம் செய்துள்ளனர். ரத்ததானம் செய்தவர்களுக்கு குளிர்பானங்கள், ஆப்பிள், பிஸ்கெட் வழங்கப்பட்டது.
இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் ரத்ததானத்தை தொடங்கி வைத்த முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயசுதா… ரத்ததானம் வழங்கியதை போல் வீடியோ, போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் உலவ விட்டார். ஆனால் முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயசுதா உண்மையில் ரத்ததானம் செய்யவில்லை. நாடகம் நடத்தி வீடியோ, போட்டோ மட்டும் எடுத்துக் கொண்டு ரத்ததானம் செய்யாமல் வெளியே வந்து விட்டார்.
இந்த நாடகம் தமிழக மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. அ.தி.மு.க.,வினரோ நாங்கள் கூப்பிடவே இல்லை. அவரே வந்து ஒரு நாடகம் நடத்தியுள்ளார். இவர் ஒருவர் செய்த இந்த பொய் நாடகத்தால், எத்தனை பேர் இப்படி செய்திருப்பார்களோ என்ற கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது என புலம்பி வருகின்றனர்.
இந்த தகவல் வெளியே பரவி திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உலா வந்து கொண்டுள்ளது.
இது குறித்து நிருபர்கள் சிலர், ஜெயசுதாவிடம் விளக்கம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், ‘நான் உண்மையில் ரத்ததானம் செய்யத்தான் சென்றேன். என் உடலில் இருந்து ரத்தம் எடுக்கும் போது, டாக்டர்கள் என்னை சோதித்தனர். எனக்கு சர்க்கரை, ரத்தக்கொதிப்பு பிரச்னைகள் இருப்பதால், ரத்ததானம் வழங்க வேண்டாம்’ என கூறி விட்டனர். இதனால் படுக்கையில் படுத்து ரத்ததானத்திற்கு தயாரான நிலையில் நான் ரத்தம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. என்று விளக்கம் அளித்துள்ளார்.
இதற்கு நிருபர்கள் பலர், அப்ப அந்த நாடக வீடியோவை வெளியிடாமல், இருந்திருக்கலாம். மக்கள் முன் எனக்கு சர்க்கரை, ரத்தக்கொதிப்பு பிரச்னை இருப்பதால் ரத்ததானம் செய்ய முடியவில்லை என சொல்லியிருக்கலாம். ஆனால் ரத்ததானம் வழங்கியது போல் வீடியோவை உலவ விட்டு, மக்களை ஏமாற்ற முயற்சித்தது ஏன்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தி.மு.க.,வினரோ இந்த வீடியோவை தங்கள் சமூக தள பக்கங்களில் பகிர்ந்து, ‘எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே… சொந்த நாட்டிலே’ என்ற எம்.ஜி.ஆர்., பாடலை பின்னணியில் ஒலிக்க விடுகின்றனர். ஆட்சிக்கு வரும் முன்னே இத்தனை நாடகம் என்றால், வந்த பின்னர் பல சினிமா படங்களை எடுப்பார்கள் போலிருக்கே எனவும் கிண்டல்கள் சமூக வலைதளங்களில் பரவி அ.தி.மு.க.,வை அலற வைத்து வருகிறது.
-மா.பாண்டியராஜ்