விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் காரை ஊராட்சியில் புதிதாக ரேஷன் கடை கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
அதை ஏற்று செஞ்சி தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் 13.59 லட்சம்ரூபாய் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக் கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.ஊராட்சி மன்றத் தலைவர்கலையரசி வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், தொகுதி எம்எல்ஏயுமான செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு நியாய விலைக் கடையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் இல்லங்களுக்கு சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தைத் தொடங்கி வைத்து தாயுமானவராகத் திகழ்கிறார், முதலமைச்சர்.
இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக மனித நேயத்துடன் மனிதர் நலனில் அக்கறையுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உயிர் காக்கும் 48 என்ற உன்னதமான திட்டத்தை தொடங்கி வைத்ததால் தமிழ்நாட்டில் ஆறு லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, திமுக பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமஜெயம் சின்னதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.விற்பனையாளர் தினேஷ்குமார் நன்றி கூறினார்.



