நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறலில் ஈடுபட்டதாக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 8 எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இடைநீக்கம் இன்று ரத்து செய்யப்பட்டது.
அரசின் தீர்மானம் மற்றும் ரத்து
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, இடைநீக்கத்தை ரத்து செய்வதற்கான தீர்மானத்தை இன்று அவையில் முன்மொழிந்தார். ஹிபி ஈடன், அமரீந்தர் சிங் ராஜா வார்ரிங், மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், குர்ஜித் சிங் அவுஜ்லா, கிரண் குமார் ரெட்டி, பிரசாந்த் படோல் மற்றும் டீன் குரியகோஸ் ஆகியோரின் மீதான நடவடிக்கையைத் திரும்பப் பெற கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பின் மூலம், உறுப்பினர்களின் இடைநீக்கம் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டது.
எல்லையை மீறக்கூடாது: அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவுரை
தீர்மானத்தின் மீது பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜு சில முக்கிய கருத்துகளை முன்வைத்தார்:
“அவை திறம்பட செயல்பட சில எல்லைகள் அவசியம். விதிமுறைகளைப் பின்பற்றுவதில் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளித்தால், நாங்களும் இணக்கமாகச் செயல்படுவோம். அவையின் மாண்பைக் காக்க என்னென்ன உறுதிமொழிகளை அளிக்கப்போகிறீர்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.”
இதனைத் தொடர்ந்து, அவையின் மையப்பகுதிக்கு வந்து போராடுவது, சபாநாயகர் மேடை மீது காகிதங்களை வீசுவது போன்ற செயல்களில் இனி ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சித் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட இந்த உடன்பாட்டை அடுத்து, சபாநாயகர் ஓம் பிர்லா இந்தத் தீர்மானத்தை ஏற்றார்.
பின்னணி என்ன?
கடந்த பிப்ரவரி 3-ம் தேதி, முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம்.நரவனேவின் நினைவுக் குறிப்புகளை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி பேச முயன்றபோது அவையில் கடும் அமளி ஏற்பட்டது. ராகுல் காந்தி ஆதாரமின்றிப் பேசுவதாகவும், அவையைத் தவறாக வழிநடத்துவதாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.
சபாநாயகர் ஓம் பிர்லா, பட்டியலிடப்பட்ட தலைப்பின் கீழ் பேசுமாறு அறிவுறுத்தியும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்குச் சென்று முழக்கமிட்டனர். காகிதங்களைக் கிழித்து வீசி அமளியில் ஈடுபட்டதால், விதி 374-ன் கீழ் 8 எம்.பி.க்களை இந்தத் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது சுமூகப் பேச்சுவார்த்தைக்குப் பின் இந்த இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், 8 எம்.பி.க்களும் மீண்டும் அவையில் பங்கேற்க உள்ளனர்.



