திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிநேர நியாயவிலைக்கடைகளை தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நேற்று திறந்துவைத்தார்.
கீழ்பென்னாத்தூர் அடுத்த சோமாசிப்பாடி ஊராட்சி புதுமைமாதா நகர், வேடநத்தம் ஊராட்சி அருந்ததியர் நகர், வேளானந்தல் ஊராட்சி அரசங்குப்பம், கோணலூர் ஊராட்சி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள அண்டம்பள்ளம் காந்திநகர், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள கருமாரப்பட்டி ஊராட்சி ராமநாதபுரம், மாதலம்பாடி ஊராட்சி பச்சையப்பன் நகர், மருத்துவாம்பாடி ஊராட்சி கொட்டாமேடு ஆகிய பகுதிகளில் கூட்டுறவுத் துறை சார்பில் பகுதிநேர நியாயவிலை கடைகள் திறப்புவிழா நடந்தது. இந்த விழாவுக்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன் தலைமை தாங்கினார். ஒன்றிய திமுக செயலாளர்கள் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், ராஜேந்திரன், சி.மாரிமுத்து, வி.பி.அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகிக்க துணைப் பதிவாளர் (பொது விநியோக திட்டம்) வினேத் அனைவரையும் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நியாயவிலைக்கடைகளை திறந்துவைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் மாவட்டகூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் சிவக்குமார், கூட்டுறவு சார்பதிவாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வட்ட வழங்கல் அலுவலர் ஜெ.ரமேஷ் நன்றி கூறினார்.



