முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மேற்பார்வைக் குழு பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டும் என கேரளா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு, கேரளா அரசு, தனிநபர் உள்ளிட்டோர் தொடர்ந்த மனு மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், திபாங்கர் தத்தா மற்றும் கோடீஸ்வர் சிங் அடங்கிய அமர்வு கேரளா அரசிற்கு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையில் தமிழ்நாடு அரசு, “கடந்த 19 ஆண்டுகளாகப் புதிய அணை கட்ட வேண்டும் என கேரளா கூறி வருகிறது. ஆனால், தற்போது இருக்கும் அணையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்காமல் இருக்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்தவும் கூட கேரளா முட்டுக்கட்டையாக இருக்கிறது” என வாதிட்டது.
இதேபோல், கேரள அரசு, “தமிழக அரசைப் பொறுத்தவரைக்கும் அணையைப் பராமரிப்பதற்கு அவர்கள் விருப்பம் காட்டவில்லை. மாறாக அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவே ஆர்வம் காட்டுகின்றனர்” எனும் வாதத்தை முன்வைத்தது.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், “முல்லை பெரியாறு அணையைப் பராமரிக்க மேற்பார்வைக் குழு ஏப்ரல் 25ம் தேதி வழங்கி உள்ள பரிந்துரைகளை கேரள அரசு செயல்படுத்த வேண்டும்.
மேலும், அணை பராமரிப்பு, அதற்கான ஒத்துழைப்பு வழங்குதல் உள்ளிட்ட மேற்பார்வைக் குழு பரிந்துரைகளை இரண்டு வாரத்தில் செயல்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.