மாமல்லபுரத்தில் வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ள வன்னியர் சங்க மாநாட்டிற்கு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வாகனங்கள் செல்ல தடை விதித்து மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 12ஆம் தேதி வன்னியர் சங்கத்தின் சார்பில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெறும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என விழுப்புரம் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி புதுச்சேரி, கடலூர் பகுதிகளில் இருந்து மாநாட்டிற்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் திண்டிவனம், செங்கல்பட்டு வழியாக மாமல்லபுரம் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வாகனங்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த கூடாது என்றும் மது பாட்டில்கள், ஆயுதங்களை எடுத்துச் செல்ல கூடாது என்று அறிவுறுத்தியுள்ள காவல்துறை, வாகனங்களில் செல்பவர்கள் கோஷங்களை எழுப்ப கூடாது என்றும் சாலையில் செல்பவர்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை இயக்க கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.
காவல்துறையின் உத்தரவுகளை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.