தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதற்கு முன்னதாக நடைபெற்ற சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர் செல்வம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது அறையில் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில், அய்யப்பன் எம்.எல்.ஏ. பேசும்போது, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா அவர்களின் ஆசியுடன் திராவிட முன்னேற்ற கழகம் மீண்டும் ஆட்சிக்கு வரும் என கருத்து தெரிவித்தார்.
இந்த நிலையில், முதல்-அமைச்சரை சந்தித்தது மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ. திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என சட்டசபையில் பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஓ.பன்னீர் செல்வம் பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் திமுக அரசு தனது ஆட்சியை சிறப்பாக நிறைவு செய்துள்ள நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தேன். தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதையே அய்யப்பன் எம்.எல்.ஏ. வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், தற்போதைய அரசியல் சூழ்நிலை, கடந்த ஐந்து ஆண்டுகளின் ஆட்சி நிலை மற்றும் திமுக அரசு தமிழகத்திற்கு செய்துள்ள பல்வேறு சாதனைகள் மக்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளன. இதனால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்கான பாதை அமைந்துள்ளது.
எனது அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை குறித்து பொறுமையாக இருந்து பாருங்கள்,” என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.



