திருவண்ணாமலை மாவட்டத்தில், அண்ணாமலையார் கோயிலுக்கு அடுத்தபடியாக பர்வதமலை பிரம்மராம்பிகை அம்மன் சமேத மல்லிகா அர்ஜூனேஸ்வரர் கோயில் பார்க்கப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலம் பகுதியில், சுமார் 4 ஆயிரத்து 560 அடி உயர பர்வதமலை மீது, பிரசித்தி பெற்ற பிரம்மராம்பிகை அம்மன் சமேத மல்லிகா அர்ஜூனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மலை உச்சியில் உள்ள இக்கோயிலை, 3ம் நூற்றாண்டில் நன்னன் எனும் குறுநில மன்னன் கட்டியதாகக் கூறப்படுகிறது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த பர்வதமலைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரம், கர்நாடகா, தெலங்கானா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் மலையேறி, தங்கள் கைகளாலேயே தாங்கள் கொண்டு செல்லும் பொருட்களை சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.
பர்வதமலை ஏறும் பக்தர்கள் பலர் மலையை முறையாகப் பராமரிக்காமல், குப்பைகளை ஆங்காங்கே வீசிச் செல்வதும், பிளாஸ்டிக் கழிவுகளை மலைமீது விட்டுச் செல்வதும் என பல குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், பர்வதமலைப் பகுதி தூய்மை இழந்து, சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிப்பதாக உள்ளது. இது சுற்றுச் ஆர்வலர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்களைக் கவலையடையச் செய்துள்ளது.
இதுமட்டுமல்லாமல் பர்வத மலைக்கு இரண்டு வழிகளிலும் பக்தர்கள் போர்வையில் ஏராளமான இளைஞர்கள் வருகின்றனர். அவர்களில் உண்மையிலேயே சிலர் பக்தர்களாகவும், பலர் பொழுதுபோக்காகவும் நுழைகின்றனர். பொழுதுபோக்காக நுழையும் இளைஞர்கள் போதை வஸ்துக்களை மறைத்து வைத்து எடுத்துச் செல்கின்றனர்.
வனத்துறையினர், சூழல் மேம்பாட்டுக் குழுவினருடன் இணைந்து பர்வத மலைக்கு வரும் பக்தர்களை சோதனை செய்துதான் அனுப்புகின்றனர்.ஆனால், சில இளைஞர்கள் போதை வஸ்துக்களை வைக்கக்கூடாத இடங்களில் மறைத்து வைத்து எடுத்துச் செல்கின்றனர். அதற்கான ஆதாரங்களையும் வனத்துறை காட்டுகின்றனர்.
என்னதான் வனத்துறை முயற்சிகள் எடுத்தாலும் கூட, எது நடந்தாலும் வனத்துறையினர் மீதே பழி வந்து சேர்வதாக வனத்துறையினர் புலம்புகின்றனர். வனத்துறையினர் மலைமீதுள்ள மரங்கள், அங்குள்ள விலங்குகள், பறவைகளையும் பாதுகாக்கவேண்டும். கூடவே பர்வதமலைக்கு வரும் பக்தர்களையும் பாதுகாக்கவேண்டும் என்றால் வனத்துறைக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது.
எங்களுக்கு பக்கபலமாக காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் அறநிலையத்துறை போன்ற துறைகளும் கைகொடுத்து நின்றால், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்வதுடன், அவர்களை பாதுகாக்கவும் முடியும். இப்பகுதியில் உள்ள மரங்கள், வன விலங்குகளை பாதுகாக்க முடியும். கூடவே வனத்தின் சுற்றுச் சூழலை மேம்படுத்தமுடியும் என்கின்றனர்.
அதனால், முதலில் மலைக்கு வரும் இளைஞர்களிடம் போதை வஸ்துக்களை தடை செய்வதற்கு காவல்துறை முழு ஒத்துழைப்பை வழங்கவேண்டும். இளைஞர்களின் போதை பழக்கத்தால் பர்வதமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு அசம்பாவிதங்கள் நேர்ந்துவிடக்கூடாது. அதற்கு அறநிலையத்துறையின் பார்வை பர்வதமலை மீது முழுவதும் திரும்பினால், காவல்துறை மற்றும் வருவாய்துறைகளின் உதவியும் கிடைத்துவிடும்.
அதனால் பர்வதமலையை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.