பாரத நாட்டின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு திருவண்ணாமலை தி.மு.க., எம்.பி., சி.என்.அண்ணாதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளார். 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விருதினை தமிழகம் கைப்பற்றி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் லோக்சபாவிற்கு 543 எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களில் பலர் பார்லிமெண்ட் விவாதங்களில் பங்கேற்காமல், அங்குள்ள கேண்டீனில் திருப்தியாக டீ, போண்டா சாப்பிட்டு விட்டு, போட்டோவிற்கு போஸ் கொடுத்து விட்டு, நிருபர்களை சந்தித்து ஏதாவது தகவல் சொல்லியே, நாடு முழுவதும் பிரபலம் ஆகி விடுகின்றனர்.
இடைவிடாமல் பார்லிமெண்ட் கூட்டத்தொடரில் பங்கேற்று, விவாதங்களில் முழுமையாக பங்கு பெற்று, கேள்விகளை கேட்டு, தங்கள் தொகுதிக்கும், மாநிலத்திற்கும் தேவையான திட்டங்களை கேள்விகள் மூலம் கேட்டுப்பெற்று சிறப்பாக செயல்படுவர்கள் கேமராக்களின் முன்பே வருவதில்லை. மிக சிறப்பாக உழைத்தவர்கள் சுவடு தெரியாமலேயே மறைந்து விடுகின்றனர். அதாவது படம் காட்டுபவர்கள், நாடு முழுவதும் பிரபலம் ஆகி விடுகின்றனர்.
இப்படி உழைக்காதவர்கள் பிரபலம் ஆவதும், உழைப்பவர்கள் மக்களுக்கு தெரியாமல் மறைவதும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிற்கே மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. அவர் பிரைம் பாயிண்ட் அறக்கட்டளையினை அழைத்து, நீங்கள் சிறப்பாக செயல்படும் எம்.பி.,க்களை தேர்வு செய்து விருது வழங்க வேண்டும். இதன் மூலம் அவர்களது மக்கள் சேவையினை நாடறிய வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து பிரைம்பாயிண்ட் அறக்கட்டளையும், பிரிசன்ஸ் இ-பத்திரிக்கையும் சேர்த்து 15 ஆண்டுகளாக சிறப்பாக செயல்படும் எம்பிக்களுக்கு விருதுகள் வழங்கி வருகின்றனர். இந்த விருது வழங்கும் விழா நிறைவடைந்ததும் ஜனாதிபதியே இவர்களை அழைத்து கௌரவப்படுத்துவார். கடந்த ஆண்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு விருது பெற்றவர்களை அழைத்து கௌரவித்தார்.
தேர்வு செய்யப்படுவது எப்படி?
ஒவ்வொரு எம்.பி.,யின் தினசரி செயல்பாட்டினை பார்லிமெண்ட் செயலகம் தனது அதிகாரப்பூர்வ தளத்தில் தினமும் பதிவு செய்து வருகிறது. பார்லிமெண்ட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கி எப்போது வரை நடக்கிறது. இந்த கூட்டத்தொடரில் எந்தெந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. எந்தெந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
எந்தெந்த மசோதா நிராகரிக்கப்பட்டது. மசோதா தாக்கல் செய்யப்படும் போது, எந்தெந்த எம்.பி.,க்கள் பார்லிமெண்ட்டில் இருந்தனர். அதில் யார், யார் மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றனர். என்ன பேசினர். எத்தனை மணி நேரம் பேசினர். மசோதாவிற்கு ஆதரவாக பேசினரா? எதிர்த்து பேசினரா? எந்த மாதிரி ஓட்டளித்தனர்.
தனிநபர் மசோதா எத்தனை தாக்கல் செய்து விவாதம் நடத்தி, வென்றனர். பொதுவாக எத்தனை நாட்கள், எத்தனை மணி நேரம், எத்தனை அமர்வில் பங்கேற்றனர். எத்தனை கேள்விகள் எழுப்பினர். அவை என்னென்ன என்பது உட்பட அத்தனை விஷயங்களையும் பார்லிமெண்ட் செயலகம் இன்ச், பை இன்ச் ஆக பதிவு செய்கிறது.
இந்த விவரங்களின் அடிப்படையில் சிறப்பாக செயல்படும் எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட்டு ‘சன்ஷத் ரத்னா’ விருது வழங்கப்படுகிறது. இதன் மூலம் இவர்களின் சிறப்பான மக்கள் சேவை அங்கீகரிக்கப்படுகிறது. இந்த ‘சன்ஷத் ரத்னா’ விருதினை முதன் முறையாக பெற்றவர், முன்னாள் தேர்தல் ஆணையர் ஸ்ரீ ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர்.
இவர் தான் இப்போது ‘சன்ஷத் ரத்னா’ தேர்வுக்குழுவின் தலைவராகவும் இருக்கிறார்.
இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் நபர்களை ‘சன்ஷத்ரத்னா’ தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் தலைமையிலான குழுவினர் தேர்வு செய்தனர். விருதளிப்பு குழு நிறுவனர் பிரைம்பாயிண்ட் சீனிவாசன், குழு தலைவர் பிரியதர்ஷினி ராகுல், ஐ.ஐ.டி., பேராசிரியர்கள், தேர்தல் ஆணைய தலைவர்கள் உட்பட பலர் தேர்வு செய்தனர்.
தமி்ழ்நாட்டில் திருவண்ணாமலை தொகுதி தி.மு.க., எம்.பி., சி.என்.அண்ணாதுரை இந்த ஆண்டுக்கான அதாவது 18வது மக்களவையின் முதல் ஆண்டுக்கான சிறப்பாக செயல்பட்ட எம்.பி.,க்களின் அடிப்படையில் இவர் தேர்வாகி உள்ளார். இதற்கு முன்னர் தமிழகத்தில் இருவர் மட்டுமே இந்த விருதை பெற்றுள்ளனர். முதன் முறையாக இந்த விருதை பெற்றவர் காங்கிரஸ் எம்.பி., கார்வேந்தன்.
இவர் 14வது மக்களவையில் சிறப்பாக செயல்பட்ட தமிழக எம்.பி., என்ற வகையில் இந்த விருது பெற்றார். அடுத்து 15வது மக்களவையில் நெல்லை எம்.பி., ராமசுப்பு இந்த விருதை பெற்றார். 16வது மற்றும் 17வது மக்களவையில் தமிழக எம்.பி.,க்கள் யாரும் இந்த விருதுக்கு தேர்வாகவில்லை. அதாவது பார்லிமெண்ட் செயலக தரவுகள் அடிப்படையில் 16வது, 17வது குழுவில் தமிழக எம்.பி.,க்கள் சிறப்பாக செயல்படவில்லை என்பதே இதன் அர்த்தம்.
தி.மு.க., எம்.பி., சி.என்.அண்ணாதுரை
இப்போது 18வது மக்களவையில் முதல் ஆண்டிலேயே தி.மு.க., எம்.பி., சி.என்.அண்ணாதுரை இந்த விருதுக்கு தேர்வாகி உள்ளார். இந்த விருதுக்கு அகில இந்திய அளவில் 4 எம்.பி.,க்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் தமிழக எம்.பி., சி.என்.அண்ணாதுரையும் ஒருவர். அதாவது பார்லிமெண்டில் உள்ள 543 எம்.பி.,க்களில் தமிழக எம்.பி., சி.என்.அண்ணாதுரை முதல் நான்கு இடங்களில் தேர்வாகி உள்ளார். இது தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை.
இது குறித்து பிரைம்பாயிண்ட் சீனிவாசன் கூறியதாவது: –
இந்த விருது சிறப்பாக செயல்படும் எம்.பி.,க்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இந்த விருதிற்கு தேர்வு செய்யும் குழுத்தலைவர் அதாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் பதவி என்பது மத்திய அமைச்சர் பதவிக்கு இணையானது. விருது பெற்ற எம்.பி.,க்களை ஜனாதிபதி கௌரவிப்பதும் வழக்கம்.
இவ்வளவு முக்கியமான விஷயங்களை கொண்ட இந்த ‘சன்சத்ரத்னா’ விருதுக்கு 11 ஆண்டுகளுக்கு பின்னர் வேட்டி கட்டிய ஒரு தமிழன் தேர்வு செய்யப்பட்டது மிகப்பெரிய வரப்பிரசாதம். தேர்வுக்குழுவில் இடம் பெற்ற நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். வரும் ஜூலை கடைசி வாரம் இந்த விருது வழங்கப்படும். இவ்வாறு கூறினார்.
-மா.பாண்டியராஜ்