திருவாரூர், நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில், யுஜிசி நெட் கோச்சிங் மையம் சார்பில் பல்கலைக்கழக மாணவர்களுக்காக இரண்டு நாள் சிறப்பு பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் கிருஷ்ணன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்துப்பேசியதாவது:-
பல்கலைக்கழகத்தில் உள்ள 28 துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் யுஜிசி மற்றும் சிஎஸ்ஐஆர் நெட் தேர்வுகளுக்காகத் தொடர்ந்து சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் பயனாகக் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
மேலும், மாணவர்கள் நெட் தேர்ச்சி பெறுவதோடு தங்களை நிறுத்திக் கொள்ளாமல், தரமான ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்து பிஎச்டி பட்டத்தைப் பெற்று சமூகத்திற்குப் பயனுள்ள ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தினார்.
நெட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகப் பல்கலைக்கழகம் சார்பில் தலா 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் திருமுருகன், பாண்டிச்சேரி பல்கலைக்கழக முனைவர் அருள்முருகன், அழகப்பா பல்கலைக்கழக முனைவர் எஸ். கோபால்சாமி, மகாராஷ்டிரா சிவாஜி பல்கலைக்கழகப் பேராசிரியர் ராசிங்கர் கஜானன் ஆகியோர் சிறப்பு வல்லுநர்களாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தனர்.
விழாவில் தேர்வு கட்டுப்பாட்டாளர் பேராசிரியர் சுலோச்சனா சேகர், கல்விப் புல முதன்மையர் பேராசிரியர் நாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். முன்னதாக, யுஜிசி நெட் கோச்சிங் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செல்வராஜ் கருங்குசாமி வரவேற்புரை ஆற்றினார். நிறைவாக முனைவர் சுரேந்திரன் நன்றி கூறினார்.



