ராஜஸ்தானின் பிகானேர் பகுதியை நேற்று மதியம் ஒரு மிகப்பெரிய புழுதிப் புயல் தாக்கியது. பிகானேர் பகுதியில் நேற்று மதியம் வீசிய புழுதிப் புயலில், பகல் நேரம் இருள் போல காட்சியளித்தது. மிகப்பெரிய மஞ்சள் புழுதிப் புயல் நகரத்தை நோக்கி முன்னேறிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இந்த புழுதிப் புயல் காரணமாக பிகானேரின் முக்கிய சாலைகளில் எதிரில் வருபவர்கள் தெரியாத அளவுக்கு காட்சித் திறன் கடுமையாக பாதித்தது. மஞ்சள் நிற புழுதிப் புயல் மற்றும் ஒரு விசித்திரமான சத்தம் காரணமாக, போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் அவசர அவசரமாக தஞ்சம் புகுந்தனர். மேலும், பலத்த சத்தத்துடன் வந்த புழுதி நிறைந்த காற்று தீவிரமடைந்ததால் பல பகுதிகளில் மக்களிடம் பீதி ஏற்பட்டது.
கடைக்காரர்கள் அவசரமாகக் கடைகளை மூடியதாலும், மக்கள் புயலிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள முண்டியடித்து ஓடியதாலும், சாலைகளில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. புழுதிப் புயலின் கடும் வேகத்தால் நகரம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பலத்த காற்று காரணமாக மரக்கிளைகள் முறிந்ததால், பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. இதுபோன்ற மோசமான வானிலை நிலவும் போது, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ராஜஸ்தானின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாகியுள்ளது. தோல்பூர் மாவட்டத்தின் பாரி பகுதியில் அதிகபட்சமாக 58 மி.மீ மழை பதிவானது. மேலும், ராஜஸ்தான் மாநிலத்தின் சில மாவட்டங்களில் அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை தொடர வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புழுதிப் புயல் உருவாகக் காரணம் என்ன?
வடஇந்திய மாநிலங்களில் கோடை காலத்தில் நிலங்கள் வறண்டு விடுகின்றன. இதனால் மண் பொடியாக மாறி காற்றில் கலக்கிறது. அதிக வெப்பத்தால் வலுவான குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகிறது. மேலும் பாகிஸ்தான் மற்றும் தார் பாலைவனத்தில் இருந்து வீசும் வெப்பக் காற்று மணல், தூசியை வாரி இறைக்கிறது.
இதுபோன்ற காரணங்களால் வடஇந்திய மாநிலங்களில் மே, ஜூன் கோடை காலத்தில் புழுதிப் புயல்கள் உருவாகின்றன. அந்த வகையில், கடந்த 13-ம் தேதி மாலையில் உத்தர பிரதேசம் மற்றும் அண்டை மாநிலங்களில் புழுதிப் புயல் வீசியது. உத்தர பிரதேசத்தில் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் புழுதிப் புயல் வீசியது. பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழையும் பெய்தது. புழுதிப் புயலால் பிரயாக்ராஜ், பதோஹி, மிர்சாபூர், பதேபூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மொத்தம் 117 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், ராஜஸ்தானின் பிகானேர் பகுதியை நேற்று மதியம் ஒரு மிகப்பெரிய புழுதிப் புயல் தாக்கி மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.



