மறைந்த புகழ்பெற்ற வான் இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் தொடர்பான புகைப்படம் ஒன்று வெளியாகி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2006-ஆம் ஆண்டு கரீபியன் தீவுகளில் நடைபெற்ற அறிவியல் கருத்தரங்கின் போது, அவர் இரண்டு இளம்பெண்களுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த புகைப்படம் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான “எப்ஸ்டீன் கோப்புகள்” என அழைக்கப்படும் ஆவணங்களில் இருந்து வெளியானதாக கூறப்படுகிறது. சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி, பணக்காரர்களுக்கு பாலியல் சுரண்டலுக்காக வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட எப்ஸ்டீன், இதற்காக தனியார் தீவையும் வைத்திருந்தார். 2019-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அவர், சில மாதங்களிலேயே நியூயார்க் சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.
எப்ஸ்டீன் தனது வாடிக்கையாளர்களுடனான உரையாடல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆவணமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அவை “எப்ஸ்டீன் கோப்புகள்” எனப் பரவலாக குறிப்பிடப்படுகின்றன. இக்கோப்புகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிரபலங்களின் தகவல்கள் அவ்வப்போது வெளியாகி சர்ச்சையை கிளப்பி வருகின்றன.
இந்நிலையில், ஹாக்கிங் தொடர்பான புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு பதிலளித்த ஹாக்கிங் குடும்பத்தினர், “புகைப்படத்தில் உள்ள இரண்டு பெண்களும் ஹாக்கிங்கின் நீண்டகால மருத்துவ உதவியாளர்கள். தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு 24 மணி நேரமும் மருத்துவ உதவி அவசியமாக இருந்தது. அதனால் அவர்கள் எப்போதும் அவருடன் இருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் தற்போது பரவி வருகிறது” என்று விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும், எப்ஸ்டீன் கோப்புகளில் ஹாக்கிங்கின் பெயர் இடம்பெற்றிருந்தாலும், அவர் மீது முன்வைக்கப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளை எப்ஸ்டீன் மறுத்ததாகவும், ஹாக்கிங் எந்த சட்டவிரோத செயலிலும் ஈடுபட்டதாக ஆதாரம் எதுவும் இல்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எப்ஸ்டீன் வழங்கிய நிதியில் நடத்தப்பட்ட மாநாட்டில் ஹாக்கிங் பங்கேற்றது உண்மைதான் என்றாலும், அவர் மீது குற்றச்சாட்டு எழுப்புவதற்கு ஆதாரம் இல்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
தசை சிதைவு நோயால் (ALS) பாதிக்கப்பட்டிருந்த ஸ்டீபன் ஹாக்கிங், வாழ்நாள் முழுவதும் சக்கர நாற்காலியில் இருந்து உலகப் புகழ்பெற்ற பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அவர் 2018 மார்ச் 14-ஆம் தேதி காலமானார்.



