கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
முகாமில் சிறப்பு விருந்தினராக திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும்,முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி கலந்து கொண்டு கிராமப்புற மக்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை பற்றி கேட்டறிந்தார்.
முகாமில் அவர் பேசியதாவது:-
தமிழக முதலமைச்சரின் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் ஆண்களுக்கு சிறுநீரகம், இருதய பரிசோதனை உள்ளிட்ட முக்கிய பரிசோதனைகளும் பெண்களுக்கு கர்ப்பப்பை உள்ளிட்ட முக்கிய பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன. 3000 ரூபாய் மதிப்புள்ள பரிசோதனை கட்டணமின்றி இங்கு இலவசமாக செய்யப்படுகிறது, எனவே கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ பரிசோதனை எளிதில் கிடைக்க வேண்டும் என்பதே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முக்கிய நோக்கமாகும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் ஆனந்த் குமார் சிங், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுகழக பொறுப்பாளருமான பொன் கௌதம சிகாமணி, திருக்கோவிலூர் நகராட்சித் தலைவர் முருகன், கள்ளக்குறிச்சி மாவட்ட துணைத் தலைவர் தங்கம்,தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், நகர செயலாளர் கோபிகிருஷ்ணன், நகராட்சி கவுன்சிலர் கோல்டு ரவி, மருத்துவர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 800-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



