திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் நேற்று முகாம் அலுவலகத்தில் படைவீரர் கொடிநாள் தினத்தை முன்னிட்டு கொடிநாள் நிதி வசூலை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கொடிநாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார். இப்பேரணியின் போது 100க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் குடும்பத்தினர் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்களிடம் கொடிநாள் நிதி வசூலித்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அளித்தனர்.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுடன் கலந்துரையாடி, திருமண நிதியுதவித் தொகையாக 2 நபர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம், கல்வி உதவித்தொகையாக 5 நபர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம், போர் விதவையர் மற்றும் போரில் ஊனமுற்ற முன்னாள் படைவீரர்களின் மகள்களின் திருமணத்திற்காக தொகுப்பு நிதியிலிருந்து 8 கிராம் தங்க நாணயம் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. இராம்பிரதீபன், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் ஸ்குவாட்ரன் லீடர் ஆ.வெ.சுரேஷ் நாராயணன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், திருவண்ணா மலை வட்டாட்சியர், முன்னாள் படைவீரர்கள், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



