தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 6 மாநில இடைத்தேர்தல் பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், வாக்காளர்களின் வசதிக்காக வாக்குச் சாவடிகளில் குடிநீர் மற்றும் செல்போன் பாதுகாப்பு அறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை உறுதி செய்யுமாறு மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அடிப்படை வசதிகள் உறுதி
கடந்த மார்ச் 15-ம் தேதி தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
வாக்குச் சாவடிகளில் ‘உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச வசதிகள்’ (Assured Minimum Facilities) இருப்பதை அந்தந்த மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இதன்படி, பின்வரும் வசதிகள் கட்டாயம் இடம்பெற வேண்டும்:
சுத்தமான குடிநீர் வசதி.
வெயிலின் தாக்கம் தெரியாத வகையில் நிழலுடன் கூடிய காத்திருப்புப் பகுதி.
தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை மற்றும் போதிய மின் விளக்கு வசதி.
மாற்றுத்திறனாளிகள் எளிதாகச் சென்று வர முறையான சாய்வுதளங்கள் (Ramps).
தரப்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு அறைகள் மற்றும் வழிகாட்டிப் பலகைகள்.
வரிசையில் காத்திருக்க பெஞ்ச் வசதி
வாக்காளர்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் பொருட்டு, குறிப்பிட்ட இடைவெளிகளில் அவர்கள் அமருவதற்கு ஏதுவாக பெஞ்சுகள் அமைக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு சாவடியிலும் 4 விதமான தரப்படுத்தப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்படும். இதில் வேட்பாளர் பட்டியல், தேவையான அடையாள ஆவணங்கள், வாக்குப்பதிவு நடைமுறை போன்ற முக்கிய விவரங்கள் இடம்பெறும்.
வாக்காளர் உதவி மையங்கள்
வாக்காளர்கள் தங்களின் வாக்குச் சாவடி எண் மற்றும் வரிசை எண்ணை எளிதில் கண்டறிய, ஒவ்வொரு வளாகத்திலும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் (BLO) அடங்கிய வாக்காளர் உதவி மையங்கள் அமைக்கப்படும். இவை வாக்காளர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும்.
முதன்முறையாக செல்போன் பாதுகாப்பு அறை
இந்தத் தேர்தலின் முக்கிய மாற்றமாக, வாக்குச் சாவடி நுழைவு வாயிலுக்கு வெளியே வாக்காளர்களுக்கான செல்போன் பாதுகாப்பு வைப்பு அறை (Mobile Phone Locker Facility) முதல்முறையாக அமைக்கப்பட உள்ளது.
“வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்லத் தடையுள்ள நிலையில், அவர்கள் தங்களது செல்போன்களை அங்குள்ள தன்னார்வலர்களிடம் ஒப்படைத்துவிட்டு, பாதுகாப்பாக வைத்துவிட்டுச் செல்லலாம். வாக்களித்து முடித்த பின் அதனைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.”
இந்த வசதிகள் அனைத்தையும் தேர்தல் தேதிக்கு முன்னதாகவே தயார் நிலையில் வைத்திருக்குமாறு அனைத்துக் களப் பணியாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.



