8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்த “நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு” என்ற பாடப்பகுதியை தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்ததுடன், அந்தப் புத்தகத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) வெளியிட்ட சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், நீதித்துறையில் ஊழல் குறித்த குறிப்புகள் இடம்பெற்றிருந்தன. இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு நேற்று வழக்கை விசாரித்தது. விசாரணையின் போது, பாடப்பகுதியின் உள்ளடக்கம் தொடர்பாக நீதிபதிகள் பல கேள்விகளை எழுப்பினர்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இந்த விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். சம்பந்தப்பட்ட அத்தியாயத்தை தயாரித்தவர்கள் இனி பாடப்புத்தக குழுவிலோ அல்லது கல்வித்துறையிலோ ஈடுபடுத்தப்பட மாட்டார்கள். சந்தைக்கு அனுப்பப்பட்ட 32 புத்தகங்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. முழுப் புத்தகமும் மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும்,” என்று தெரிவித்தார். இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி மற்றும் கபில் சிபல் ஆகியோரும் ஆஜரானார்கள்.
அனைத்து தரப்புகளின் வாதங்களையும் கேட்ட பிறகு, நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
நீதித்துறையில் ஊழல் குறித்த அத்தியாயத்துடன் வெளியான 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்திற்கு தடை விதிக்கப்படுகிறது.
அச்சு மற்றும் டிஜிட்டல் வடிவம் உள்ளிட்ட அனைத்து வடிவங்களிலும் அந்தப் புத்தகத்தை உடனடியாக நீக்க வேண்டும்.
மத்திய கல்வித்துறை செயலர் மற்றும் என்சிஇஆர்டி இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலும், மத்திய அரசும் இதுதொடர்பான பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வித்துறை முதன்மைச் செயலாளர்கள், உத்தரவை நடைமுறைப்படுத்திய விவரங்களுடன் 2 வாரங்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும், இந்தப் புத்தகத்தை அச்சிடவோ அல்லது டிஜிட்டல் வடிவில் பகிரவோ கூடாது என்றும், தடையை மீறுபவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மார்ச் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



